சென்னை : கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பெங்களூரு புலிகேசிநகர் தொகுதியில் மட்டும் போட்டியிடுவதாகவும், அங்கு அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அதாவது புலிகேசிநகர், காந்திநகர், கோலார் தங்கவயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது நேற்று நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் அனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதில் காந்தி நகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், ” கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.