47ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் மாதம் 28ஆம் தேதி சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்றது. தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களான தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை 15 சதவிதம் அளவிற்கு உயர்த்தி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமும் இன்று (ஜூலை மாதம் 21ஆம் தேதி) முதல் தயிர், லஸ்ஸி, நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தியுள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆவின் தயிர் 100 கிராம் ரூ.10லிருந்து ரூ.12ஆகவும், நெய் 1 லிட்டர் ஜார் ரூ.535லிருந்து ரூ.580ஆகவும், 15 கிலோ நெய் டின் ரூ.8680லிருந்து ரூ.9680ஆகவும், 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.10லிருந்து ரூ.12ஆகவும், 1 கிலோ பிரிமீயம் தயிர் ரூ.100லிருந்து ரூ.120ஆகவும், 200 மில்லி மேங்கோ லஸ்ஸி ரூ.23லிருந்து ரூ.25ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.