சென்னை: அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித்துறை அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)-க்கு துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் மூலம் பல்வேறு வகையான மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.