நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகஸ்ட் 1ஆம் தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும்? யார் கலந்து கொள்வார்கள்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில், ‘வழக்கம்போல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அழைப்புக் கடிதத்தை யார் பெறுகிறார்களோ அவர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது’ என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.