திருப்பூர் மாவட்டம், அவிநாசி நம்பியம்பாளையம் அடுத்த நாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதேயான இளைஞர் நடராஜ். இவர், சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, நடராஜ் உடலில் இருந்து உறுப்புகளை தானமாக வழங்க அவரின் பெற்றோர் முன்வந்துள்ளனர். எனவே, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை, 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டன. ஏழு பேர் மறுவாழ்வு பெற உதவியதன் மூலம், மறைந்தும், நடராஜ் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நபர் மூளைச்சாவு அடைந்தால் மட்டுமே உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முடியும். இந்தியா முழுவதும் பல லட்சகணக்கான மக்கள் உறுப்புகளை தானமாக பெற பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.