கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, பல பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளை தாண்டி மழை வெள்ளம் பல வீடுகளிலும் புகுந்ததால் வீடுகளை இழந்து மக்கள் வேறு இடங்களில் தஞ்சமடைந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. இந்த நிலையில், தற்போது வெள்ளம் வடிந்தாலும், பல சாலைகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதையடுத்து, சாலைகளை சீரமைக்கக்கோரி அந்த மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நித்தியானந்தா, காவி உடையணிந்து, சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்தும், சாலையில் படுத்து உருண்டும் நூதன போராட்டத்தை நிகழ்த்தியுள்ளர். இந்த காணொலி இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.