சென்னை: தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கிடையே மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் டிசம்பர் 17 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள ஏகலைவா உறைவிட பள்ளி மாணவிகள் 177 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு வண்டலூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 1 மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த மாணவ-மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நேரில் சென்று மாணவ-மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் நிகழ்ச்சி இதில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நீங்கள் எந்தெந்த விளையாட்டில் கலந்து கொண்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒரு மாணவன் அமைச்சர் உதயநிதியிடம் கேள்வி கேட்கையில், ‘எங்கள் பள்ளியில் சரியான கிரவுண்ட் (மைதானம்) இல்லை. அதற்கு நீங்கள் கிரவுண்ட் ரெடி செய்து தர வேண்டும்’ என்றான். இதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறி இருந்தோம். எனவே கண்டிப்பாக ஸ்டேடியம் அமைத்து தர தேவையான அத்தனை முயற்சிகளையும் எடுப்பேன் .இன்னொரு மாணவி கேட்கையில், ‘விளையாட்டு நேரத்தில் வேறு பாடம் எடுக்கிறார்கள்’ என்றார். இதற்கு அமைச்சர் உதயநிதி பதில் அளிக்கையில் கண்டிப்பாக முதலமைச்சரிடம் சொல்லி, அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்க்கப்படும் என்றார்.