சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. நவம்பரில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்று நல்ல மழையை கொடுத்தது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
மேலும் டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பிய நிலையில், அதனை தொடர்ந்து உருவான மற்றொரு காற்றழுத்தம் மூலம் பருவமழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்து 8-ந்தேதி அது தீவிர புயலாக உருவானது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் வடதமிழகத்தை நோக்கி வந்து 9-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மாண்டஸ் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றது.