நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரக்காடு பகுதியில் கடந்த 10ஆம் தேதி தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்தின் நான்கு வயது மகள் சாரிதாவை சிறுத்தை தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி, 15 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு வனத்துறையினர் கடந்த 10 நாட்களாக சிறுத்தையை தேடி வந்தனர். அதன்படி, இன்று காலை சிறுத்தையை பிடிக்க தேயிலை தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை அகப்பட்டது. பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.