தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் 2ஆவது நாளாக இன்று காலை கூடியது. கூட்டத்தொடரில், முதலில் சபாநாயகர், ஆளும் கட்சி சார்பாக முதலமைச்சர், அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றனர். அப்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு பேசினர். பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை கூடி இன்றைய அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது அருகருகே ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அமர்ந்திருந்தனர். இதையடுத்து, இருக்கை தொடர்பாக, ஈபிஎஸ் தரப்பு அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதுடன் சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதையடுத்து, அவர்களை வெளியேற்ற சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டிருந்த நிலையில், அவைக்காவலர்களுக்கு அதிமுகவின் எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற உத்தரவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர் எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி எனவும் விதிப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியே இல்லை எனவும் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். சபை மரபுப்படியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அலுவல் ஆய்வு குழு உறுப்பினர் நியமனத்தில் சபாநாயகருக்கே முழு அதிகாரம் உள்ளது. இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் இருக்கவே அதிமுகவினர் கலகம் செய்ததாக சந்தேகிக்கிறேன் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்கு பதில் சொல்ல பயந்து அதிமுகவினர் கூச்சலில் ஈடுபடுகின்றனர் என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.இந்த நிலையில், கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.