சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலில், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமியும், எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாகவே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது. தற்போது, அ.தி.மு.க.வில் 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில், 2,662 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். மீதமுள்ள 148 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாக தெரிகிறது. இந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டு, தனது கட்சி உறுப்பினர் அட்டை, ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் நேற்று இரவு 7 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கினார்கள். அவைத்தலைவரின் முடிவு பாரபட்சமானது என கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் யாரும் கடிதம் வழங்கவில்லை. ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணி வரை 85 சதவீத உறுப்பினர்கள் கடிதத்தை கொடுத்து விட்டதாகவும், இன்று காலை வரை கடிதம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக, அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி செல்கிறார். அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என்றும், அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியானால் , நாளை வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.