சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். ஆனால் , அதிமுக பிளவுபட்டபிறகு , எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிரடியாக நீக்கினார்கள். இதையடுத்து அந்த பொதுக்குழு கூட்ட முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்களை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:- ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்கிறது. எனவே அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லும். அந்த கூட்டத்தில் அ. தி. மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது சரிதான் என்றது. மேலும், பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.