சென்னை: அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 17-ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலை நடத்தும் ஆணையாளர்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந் தேதி (நேற்று முன்தினம்), 19-ந் தேதி (நேற்று) மதியம் 3 மணி வரை நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர். விசாரணைக்கு மத்தியிலும் விறுவிறுப்பு இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி பெயரில் 224 பேர் மனு அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற அறிவிப்பை கட்சியின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வெளியிட இருந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.