நவீன உலகில் செல்போனில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்வோர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் சமூக வலைதளங்களில் பல மணிநேரம் மூழ்கி கிடப்பதாகவும் இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஸ்வான்சீ பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் 20 முதல் 25 வயதுடைய 50 பேரிடம் ஆய்வு நடத்தினர். 3 குழுக்களாக பிரித்து 3 மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மக்கள் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கும்போது உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் செயல்பாடுகளில் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் பில் ரீட் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் சமூக ஊடக பயன்பாட்டை குறைக்கும் போது அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்கான நன்மைகள் உள்பட பல வழிகளில் அவர்களின் வாழ்க்கை மேம்படும் என்பதை இந்த ஆய்வு தகவல்கள் நிருபிக்கின்றன என கூறப்பட்டுள்ளது.