சென்னை மாநகர் பகுதியில் 500-க்கு மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களும், 200-க்கு மேற்பட்ட பெரிய அளவிலான போக்குவரத்து சந்திப்புகளும் உள்ளன.ஆம்புலன்ஸ் மற்றும் அவரச கால வாகனங்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காண இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
இந்தச் சந்திப்புகளில் அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்படவுள்ளது. தற்போது போக்குவரத்து காவலர் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தின் அடிப்படையில்தான் சிக்னல்கள் இயங்கி வருகிறது. இந்த அடாப்டிவ் முறையில் தாமாகவே திறக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்படும்.
ஒரு போக்குவரத்து சந்திப்பில் அதிக வாகனங்கள் நின்றுகொண்டு இருந்தால், அந்த சிக்னல் தாமாகவே திறக்கப்படும். ஒரு சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவது தெரிந்தால் தொடர்ந்து 4 சிக்னல்கள் திறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாவதாக, மாநகரப் பேருந்து அமைப்பு என்னும் நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி பேருந்துகளில் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படவுள்ளது. இதன் மூலம் பேருந்துகளில் எங்கு சென்று கொண்டு உள்ளது என்பதை நிகழ் நேரத்தில் கண்டறிய முடியும். 500-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 15 நாட்கள் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.