பஞ்சாப் பத்திண்டா மாவட்டம் துணைத் தாலுகா பக்த பாய் காவின் சிர்யே வாலா கிராமத்தைச்சேர்ந்த விவசாயி யாவீந்தர் சிங் கோக்கர் (49) சொந்தமாக விமான மாதிரிகளை உருவாக்கி அது குறித்த தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்.
திருமண நிகழ்வுக்காக இங்கிலாந்து சென்ற போது அங்குள்ள கிளப்பில் விமான மாடல்களைக் கண்டேன்.அங்கிருந்து 2 சிறிய ஏரோ மாடல் விமானங்களை இங்கு வரவழைத்துவிட்டேன். பின்பு அதிக அடர்த்தி நிறைந்த சிறப்பு தெர்மோகோலில் பெரிய ரக விமானங்களின் மாதிரிகளை உருவாக்கி வருகிறேன்.பறக்கும் கோட்பாடு, எலக்ட்ரானிக் செட் அப், இன்ஜின் செட் அப், விமானங்கள் பறக்கும் விதம் என அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு சொந்த ஏரோ மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கும் அவற்றை கற்றுத்தர ஆரம்பித்தேன்.
அண்மையில் நான் உருவாக்கிய சி-130 ஹெர்குலிஸ் டிரான்ஸ்போர்ட் விமான மாடலை இந்தியாவில் கையால் உருவாக்கப்பட்ட பெரிய விமான மாடலாக 2022 ஆகஸ்டில் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.விமான தொழில்நுட்பங்களை கல்லூரி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் வகையில் தற்போது, சண்டிகர் யுனிவர்சிட்டி, மகாராஜா ரஞ்சித் சிங் பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பத்திண்டா மற்றும் ஜிஎன்ஏ பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.