நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம்நாத் அமர்வில் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி,‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கதமிழக அரசுக்கு முழு அதிகாரம்உள்ளது. கடந்த ஆண்டுகளிலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிஇடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலும் இடஒதுக்கீட்டின்படி கலந்தாய்வு நடத்த வேண்டும்’’ என வாதிட்டனர்.மனுதாரர்கள் தரப்பில், ‘‘இவ்வாறு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதால், அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில் இடம்பெறும் மருத்துவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை’’ என வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீல் வாதிடும்போது, ‘‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதே மத்திய அரசின் முடிவு.ஏனெனில் இளநிலை மருத்துவப் படிப்பு மருத்துவர்களை உருவாக்குகிறது என்றால், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகள் மருத்துவ நிபுணர்களை உருவாக்குகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரி நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். தேச நலனே முக்கியம்’’ என்றார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘நடப்பு கல்வியாண்டிலும் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கலந்தாய்வை தமிழக அரசு 15 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’’ என அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.