உலகமெங்கும் இன்று உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு தினத்தை நினைவுபடுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும். மருத்துவம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு.வருவாயில் பின்தங்கிய மற்றும் நடுத்தர நாடுகளில்தான் பெரும்பான்மையானோர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
1988-ம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம், டிசம்பர் 1-ம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்து வருகிறது. `உலக அளவில் 3 கோடியே 67 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்போடு வாழ்கிறார்கள்; அவர்களில் 18 லட்சம் பேர் குழந்தைகள்’ என்கிறது, 2015-ம் ஆண்டுக்கான ஒரு புள்ளிவிவரம். அதே 2015-ம் ஆண்டில்தான் 11 லட்சம் பேர் எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி இறந்துபோயிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு, இந்த தினத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருப்பது, “ஆரோக்கியத்துக்கான உரிமை” என்பதுதான். முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.