உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜெண்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ( ‘சி’ பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது போட்டியில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி 3- வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை இன்று எதிர்கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதனால் அர்ஜெண்டினா வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும். அந்த அணி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. போலந்து டிரா செய்தாலே தகுதி பெற்றுவிடும். இரு அணிகளும் உலக கோப்பையில் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன. 2-வது சுற்று வாய்ப்பை பெற கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். டிரா செய்தாலோ, தோற்றாலோ வெளியேறிவிடும்.
குரூப் ‘டி’ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்- துனிசியா ஆஸ்திரேலியா- டென்மார்க் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன. பிரான்ஸ் 2 வெற்றியுடன் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 1 டிரா, 1 தோல்வியுடன் இருக்கும் துனிசியா வெற்றி நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணி பிரான்சை வெல்வது சவாலானது. ஆஸ்திரேலியா-டென்மார்க் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னேற்றம் அடையும். இதனால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.