காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை (பாரத் ஜோடோ யாத்) ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுலின் இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை கடந்து இன்று தெலங்கானா மாநிலத்திற்குள் கடந்த சில தினங்களுக்கு முன் நுழைந்தது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ருத்ரா ராமில் இன்று 57ஆவது நாளாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க ‘திம்சா’ நடனமாடி ராகுலை வரவேற்றபோது ராகுல் காந்தியும், அவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினார். அதன்பின்னர் தெலங்கானாவில் பொனாலு பண்டிகையில் பங்கேற்று கொண்ட ராகுல்காந்தி தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பயணத்தில், ராகுல் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாட்கள் மொத்தம் 3,600 கி.மீ. தொலைவு கடந்து காஷ்மீரை அவர் அடையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.