தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபையும் இணைந்து பசுமை விமான நிலையம் மற்றும் தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்கு தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மேடையில் பேசிய அமைச்சர், “திமுக ஆட்சி அமைந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இதுவரை 2.5 லட்சம் கோடிக்கும் மேலான புதிய முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இந்தியாவில் மட்டுமல்ல தென் கிழக்கு ஆசியாவிலேயே தமிழகம் தான் சிறந்த தொழில் துறை மாநிலமாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இந்த தொழில் துறைக்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்த சென்னையில் புதிய விமானம் தேவை என திடமான, தொலை நோக்கு முடிவை முதலமைச்சர் எடுத்துள்ளதாக கூறிய அமைச்சர், அப்போது தான் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நாம் அடைய முடியும் என கூறினார். புதிய விமான நிலையத்திற்காக சென்னையை சுற்றி 11 சாதகமான இடங்களை பார்வையிட்டதாகவும் அதில் பல இடங்கள் சுற்றுச்சூழல், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தவிர்க்கப்பட்டதாக கூறினார். இவை எல்லாம் ஆலோசித்த பின் தான் இறுதியாக பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் எனவும் இந்த விமான நிலையம் வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும் என கூறினார். பரந்தூர் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டை ஒரு முன்னணி மாநிலமாக மாற்ற முதலமைச்சர் விரும்புவதாக கூறிய அமைச்சர் அதன் காரணமாக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மைல்கல்லாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.