கென்யாவில் மீன் பிடி வியாபாரத்துக்காக பாலியல் சுரண்டலில் சிக்கியிருந்த மீனவப் பெண்கள் No Sex For Fish’? என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கென்யாவின் விக்டோரியா ஏரியின் அருகே வசிக்கும் பெண்கள் நெடுரு கடற்கரையில் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் மீன்களை பிடிப்பதற்கும்,அதனை சந்தைப்படுத்துவதற்கும் அங்குள்ள ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அவர்களால் அந்தத் தொழிலை செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக இருந்து வந்துள்ளது. அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக உடலுறவு கொள்ளும் பெண்களை எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பெண்கள் அனைவரும் இதற்கு தீர்வு காண ஒன்றிணைந்து உள்ளனர்.அதன் காரணமாக அங்குள்ள பெண்கள் சுயமாக சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி உதவி கேட்டுள்ளனர்.சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியால் தற்போது 30 படகுகள் அந்தப் பெண்கள் வாங்கியுள்ளனர்.
அப்படி வாங்கப்பட்ட அந்த மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளில் ‘No Sex For Fish’ என்று எழுதி அங்குள்ள ஆண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலை செய்து வருகின்றனர். இது தொடர்பாக பேசிய பெண்கள் “என்ன நடந்தாலும் நடக்கட்டும் இனி எங்களால் ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு இரையாக முடியாது “என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அங்குள்ள பெண்களை பாலியல் சுரண்டலில் ஈடுபடுத்துவது குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்களின் துணையின்றி அங்குள்ள பெண்கள் மீன்களை பிடித்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.