முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கி இன்று மாலை வரை காலை மாலை என இரு வேளைகளிலும் நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா நடந்த நிலையில், இந்தாண்டு கட்டுபாடுகள் விலக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பச்சை ஆடையணிந்து அரோகரா கோஷம் முழங்க சஷ்டி பூஜையில் பங்கேற்று விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதையடுத்து, நாளை மாலை முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையொட்டி, சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, 31ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.