காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 290 படுக்கை வசதிகளுடன் இயங்கி வரும் இந்த மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், 750 படுக்கை மற்றும் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மாற்றப்படவுள்ளது. உலகவங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் நிதி உதவியுடன் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க புதிய கட்டடங்கள் மற்றும் கருவிகள் வாங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பொது மருந்துகள், அறுவை சிகிச்சை அறைகள், தீக்காய சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.