டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், சூப்பர் 12 சுற்றில் நேரடியாக விளையாடவுள்ள அணிகள், தலா 2 பயிற்சி ஆட்டங்களை விளையாடுகின்றன. இதில், பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்திருந்தது. எனவே, இன்றைய போட்டியில் இந்திய அணியை வெல்ல நியூசிலாந்து அதிகமாக உழைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுபோல இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அசத்தும் என எண்ணப்படுகிறது. இதனால், இந்தியா-நியுசிலாந்து இடையேயான போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை காண காத்திருக்கின்றனர். மேலும், இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டங்களில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இத்துடன், சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான தகுதி சுற்றின் இன்றைய ஆட்டத்தில், ஜிம்பாப்வே-மேற்கிந்திய தீவுகள் அணியையும், ஸ்காட்லாந்து-அயர்லாந்து அணியையும் எதிர்க்கொள்கிறது.