ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்காக, ஆண்டு தோறும் ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படுகின்றன.மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்து கொள்வதற்கு வசதியாக, இந்தாண்டு முதல், ஜே.இ.இ., மெயின் தேர்வு, நான்கு தவணைகளாக நடத்தப்பட்டது
நான்கு தவணைகளில் நடந்த ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள், கடந்த 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், 44 பேர், 300 க்கு 300 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில், 18 பேர், முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.வழக்கமாக, மாணவர்களே முதலிடத்தைப் பிடிப்பர். முதல் முறையாக, இரண்டு மாணவியர், முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.டில்லியைச் சேர்ந்த காவ்யா சோப்ரா, பிப்ரவரியில் நடந்த முதல் தவணை தேர்வில், 99.97 சதவீத மதிப்பெண் பெற்றார்; தற்போது, 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.டில்லியை ஒட்டியுள்ள உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சேர்ந்த பால் அகர்வால், பிப்ரவரியில் நடந்த தேர்வில், 99.98 மதிப்பெண் பெற்றிருந்தார்; தற்போது, 100 சதவீத மதிப்பெண்ணுடன் முதல்இடத்தைப் பிடித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆப்ரஹாம், 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளார். ஆர்.ரோஷனா, 99.99 சதவீத மதிப்பெண் பெற்று, தமிழகத்தில் மாணவியர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.ஜே.இ.இ., மெயின் தேர்வு முடிவு வெளியானத்தை தொடர்ந்து, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கு பதிவு செய்வது துவங்கிஉள்ளது. வரும், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது