தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைத் தொடர்பான விவகாரத்தையடுத்து, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் நடுநிலையாக செயல்படவில்லை. அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறார். சபாநாயகர் மரபு, மாண்பை மீறிவிட்டார். ஆர்.பி. உதயகுமார் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவிகளுக்காக முன்பே கடிதம் கொடுக்கப்பட்டது. நாங்கள் வைத்த கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்கவில்லை. திமுக ஆலோசனைப்படி தான் சபாநாயகர் செயல்படுகிறார். எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்த பின்பும் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர், கொள்ளை புறத்தின் வழியாக சட்டப்பேரவை மூலமாக எங்களை பழிவாங்க முயற்சி செய்கிறார். நீதிமன்ற உத்தரவை ஒப்படைத்தும் அவர் பார்க்கவில்லை. கட்சி சார்பான பொறுப்புகளை சட்டப்பேரவைக்குள் புகுத்துவது தவறு. நீதிமன்ற தீர்ப்பு உத்தரவை சபாநாயகர் பின்பற்றவில்லை. தீர்ப்பிற்கு எதிராக செயல்படுகிறார். அரசியல் ரீதியாக நேரடியாக அதிமுகவை எதிர்க்க திமுக.,வுக்கு தெம்பு திராணி இல்லை. ஜெ., மரணம் தொடர்பாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் விசாரணை ஆணையத்தை அமைத்தது நாங்கள் தான். நாங்கள் அமைத்த விசாரணை ஆணையத்திற்கு அவர்களின் விளக்கம் தேவையில்லை. மக்கள் கொதிப்பில் உள்ளனர். இந்த ஆட்சி எப்போது போகும் என பார்த்து கொண்டுள்ளனர். இதனை மறைக்கவே இந்தி எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றனர். திமுக பொதுக்குழுவில், திமுக தலைவர் பேசும்போது, ‘நான் கண் விழிக்கிற போது எங்களது கட்சியில் இருந்து என்ன பிரச்னை வருமோ என பயத்துடன் விழக்கிறேன்’ எனக்கூறியுள்ளார். அது தான், ஆட்சி குறித்து அவர் கொடுத்த வாக்குமூலம். அப்படி இருக்கையில் மக்களை எப்படி காக்க முடியும். நீங்கள் (திமுக) என்றைக்கு ஆட்சிக்கு வந்தீர்களோ அப்போதே மக்களுக்கு தூக்கம் போய் விட்டது. அதிமுக திறமையாக ஆட்சி செய்து ஆட்சி காலத்தை நிறைவு செய்தோம். ஆட்சி செய்ய திராணி இல்லாமல் ஸ்டாலின் தவிக்கிறார். அனைத்து திசையிலும் திமுகவுக்கு அடி விழுகிறது என்று அவர் பேசினார்.