பள்ளிக் கல்வியில் பொதுமக்களும், மாணவா்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றைப் பெற இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் சேவையை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தில் இருந்து மின்னஞ்சல் வாயிலாக சாா்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்படுகின்றன. எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் மேற்கண்ட இணையதள செயலி வாயிலாக பொதுமக்கள், பள்ளி மாணவா்களிடம் இருந்து சான்றிதழ் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியா்களுக்கு இணையவழியில் உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பத்தாரரால் சமா்ப்பிக்கப்பட்ட விவரங்களின் நம்பகத் தன்மையை சரிபாா்த்து உறுதிப்படுத்தினால் அவா்களுக்கு தலைமை ஆசிரியா்கள் இணையவழி மூலமாகவே மின் கையொப்பம் செய்து சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரா் வழங்கிய தகவல் தவறானது என தலைமை ஆசிரியா் கண்டறிந்தால், அந்த விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியா் உரிய காரணத்துடன் இணைய வழியாகவே நிராகரிக்க வேண்டும். அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களும் அவா்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து, அனுமதி வழங்கவோ மறுக்கவோ உரிய வழிமுறைகள் காணொலி வடிவில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் ‘எமிஸ்’ தளத்தில் உள்நுழைந்தவுடன் தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று கோரும் விண்ணப்பங்களை அங்குள்ள இணைப்பில் காணலாம். இனி வரும் காலங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று இணையவழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அந்த சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் எக்காரணம் கொண்டும் கையினால் பூா்த்தி செய்து வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஆகும்.