வாசமிக்க பூமலரும் மரம்
அவ்வீட்டின் நிலையாகியிருந்தது
கதவுகள் மோதி மோதி
திரும்பும் போது
தன் வாசத்தை சிந்துகிறது
வலியா மகிழ்வா
வாசத்தில் மகிழ்ந்தபடி
புரியாமல் வந்து போகின்றன கால்கள்
வண்ணத்து பூச்சிகளும் தேனீக்களும் அந்த
நிலையையே சுற்றி சுற்றி
வருகின்றன
இறகசைப்பின் தீண்டலிலும்
மென்பாதங்கள் தழுவலிலும்
பூத்து விடத் துடிக்கின்றது
அறையில் நுழைகிறது வாசம்
வாசல் கடந்து செல்லவா வேண்டாமா
என்ற படி
வாசனைகள் முடிந்து போன
இரவொன்றில் நீ
விட்டுச் சென்றது வெறும்
தீராதிருந்த என் உடலும்
உனது சோடி செருப்பு களும்
மட்டுமாகவே இருந்தது
உதிர்ந்து போன பூக்களுக்கிடையில்
காத்திருப்பை சொல்லும்
இதயமொன்றின்
துகளாவது கிடக்குமா
உதறிமடிக்கும் விரிப்பில்
தீ வளர்க்குது அவள் தேடல்
அவள் பயிர் வைத்திருந்த நிலம்
இற்று தரிசாய்க் கிடக்கின்றது
நீ எவ்வளவு உழுதாலும்
பிரண்டு படுக்க மாட்டேனென்கிறது
அவள் ஊன் தின்ற விதைகள்
முளைக்க மறுத்து
எறும்புகளுக்கு இரையாயின
நிலம் அவளைப் போலவே
கர்ப்பப் பையை
தூக்கிப் போட்டிருந்தது
கடல் சுமந்தலையும் தீவுகள்
தனக்குள் சுவடுகளை வைத்துக்
கொள்வதில்லை தண்ணீர்
.சுவை மாறுபடுவதைச் சொல்லும்
மனிதனை எத்தனை முறை கழுவினாலும்
அவனது வாசத்தை தன்னுள்
ஏற்றிக் கொள்வதேயில்லை அலைகள்
நீர் சுமந்த காதல் வாசம்
தனித் தே அலைகிறது
அவளின் காற்றிலையும் மயிர்
கற்றையாய்
கடல் சுமந்தலையும் தீவாய்
கரையாத காதலை
சுமந்தலைகிறாள்
வாசிக்க மறுக்கும் எதிர்காலத்தை
அருகில் வைத்துக் கொண்டு
அந்த நெல்
மண்ணோடு விளைந்தது
நீரோடு நனைந்தது
காற்றோடு கலந்தது
தேன் குடித்து
கலந்த வண்ணத்து பூச்சிகள்
கதிராய் ஆன பொழுதொன்றில்
அவளோடுஇல்லாமல் போயின
கதிர்களைத் தேடிய
சிறகு கூட்டங்கள் அவளைத் தேடிவந்தன
ஒருநாள் புத்தரிசி சோறாகினாள்
குலசாமி படையலாகினாள்
வாசலில் தொங்கும் மங்களத் தோரணமாகினாள்
சில குதிர்களில்
விதை நெல்லாகியது
கடைசி வரை
அந்த நெல்லுக்கு தெரிந்திருக்கவில்லை
தான் யாரென்று
—+++