சென்னை-28 திரைப்படம் மூலம் தமிழ்திரை உலகில் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு தனது தற்போதைய திரைப்படங்களான மாநாடு மற்றும் மன்மத லீலை வெற்றிக்கு பிறகு அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். முன்னதாக இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தாயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட வெங்கட் பிரபுவின், திரைப்படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவே ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்து இசையமைத்து வந்தார். இந்த நிலையில் இதுவரை 10 திரைப்படங்களை இயக்கியுள்ள வெங்கட்பிரவின் தற்போதைய 11ஆவது திரைப்படமான ’என்சி22’ திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இதனைத்தொடர்ந்து, ஏற்கனவே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் ஜீவா வில்லனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் க்ரித்தி ஷெட்டியும் நடிக்கிறார். இந்த நிலையில் பிரியாமணி, நடிகர் சம்பத், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், பிரேமி வசந்த் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்றிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.