கடந்த சில தினங்களாக மெட்டா நிறுவனத்துக்கு போதாத காலம் போல. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் சமூக வலைதளங்களில் இருந்து பயனர்களின் தகவல்களை ஹேக்கர்கள் எளிதில் திருட முடியும் என டெலிகிராம் நிறுவனர் எச்சரித்த நிலையில், அந்த கொந்தளிப்பு அடங்குவதற்கு முன்னரே, ஃப்பி, இன்ஸ்டா யூசர்களுக்கு அடுத்த பேரிடியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்கள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷ்யா. இந்த நிலையில் தற்போது, ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்கள் பலர், தங்களைப் பின்தொடர்வோரை அதிக அளவில் இழந்து வருகின்றனர். இதற்கு மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பெர்க்-கும் விதிவிலக்கல்ல. மார்க் தனது 118 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள அதன் செய்தித் தொடர்பாளர், ஃபாலோயர்களின் எண்ணிக்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.