பெரும்பாலும் வரலாற்றை பற்றியோ அல்லது ஒரு தலைவர்களை பற்றியோ ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால்,அந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உறுதியாக இருந்தே தீரும் என்பது உண்மை. அந்த வகையில் தலைவி படத்தில் அப்படியான விமர்சனங்கள் எழாது என்று பேசப்பட்டு வந்த நிலையில்,தற்போது அந்த படத்திலும் விமர்சனங்களும்,சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “தலைவி “இந்தப் படம் இந்தி,தமிழ் உள்பட மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது.எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர்.ஜெயலலிதாவின் பள்ளிப் பருவம் தொடங்கி ஆட்சியில் அமரும் வரை இந்த திரைப்படம் பேசுகிறது.ஜெயலலிதாவின் தந்தை இறந்துவிட நிதி நெருக்கடியால் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு திரைத்துறைக்குள் அவருடைய பிரவேசம் எப்படி இருந்தது,எம்.ஜி ஆருடன் ஏற்பட்ட நட்பு,அவருக்காக ஜெயலலிதா செய்த தியாகம்,எம்.ஜி. ஆர் காட்டிய அரசியல் வழி என அனைத்தையும் இந்தத் திரைப்படம் மிக அழகாக விவரிக்கிறது.எம்.ஜி.ஆராக அரவிந்த சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத்தும் மிக இயல்பாக இருவரையும் திரையில் நிறுத்தியுள்ளனர்.அதோடு ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரகனியும்,கருணாநிதியாக நாசரும் நடித்திருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இப்படி கதா பாத்திரங்கள் தேர்வு, படத்திற்காக அமைக்கப்பட்ட செட் என பல விஷயங்கள் இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தாலும், ஒரு சில காட்சிகள் தவறாக திரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பேசுகையில், “கடுமையான போராட்டத்திற்கு இடையே ஒரு பெண் உயர் பதவியை அடைவது சாதாரண விஷயமல்ல என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் படம் உள்ளது.அம்மாவின் வாழ்கை மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதை போல் உயர்வாகத்தான் சொல்லப்பட்டுள்ளன..குறிப்பாக ஆணாதிக்க சமூகத்தில்,அவமானங்களையும்,போராட்டங்களையும் அம்மா எப்படி கடந்து வந்தார் என்பதை அப்படியே கூறியுள்ளனர். அந்த வகையில் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.
அதே நேரத்தில் படத்தில் சில காட்சிகளில் திரித்துப் பொய்யான தகவலை வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர்.பொறுத்தவரை என்றுமே பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. அவர் குண்டடிபட்டு கிடந்தபோது, ஒரு போஸ்டர் தான் பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது.அண்ணா மறைவிற்கு பிறகு கருணாநிதி பெயரை முன்மொழிந்தது எம்.ஜி.ஆர் தான்.ஆனால், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் பதவி கேட்டதுபோல் காட்சி வைத்துள்ளனர்.அதேபோன்று எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதற்கு,பணம் கேட்ட எம்.ஜி.ஆருக்கும் எம்.ராதாவுக்கும் இடையே நடந்த தகராறில் எம்.ஆர்.ராதா சுட்டதாக காட்சிப் படுத்தியுள்ளனர்.அது மிகவும் தவறான கண்ணோட்டம் ஆகும்
எம்.ஜி.ஆர் வரும்போது சூட்டிங்கில் அம்மா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பது போன்றும்,நாய்க்கு வணக்கம் வைப்பதை போன்றும் திரித்து காட்டியுள்ளனர். அம்மாவை ஒரு பெண் என்றும் பார்க்காமல் சட்டப்பேரவையில் அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து,சேலை கிழித்து செய்த அநியாயங்களை கருப்பு தினம் என்று எங்கள் கட்சி கடைபிடிக்கிறது.ஆனால் அதை மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி தான் கடைபிடித்தார் என்பது போன்று காட்சிப் படுத்தியுள்ளனர்.அது மிகவும் தவறானது. முற்றிலும் பொய்யான தகவலை திரித்து கூறியுள்ளனர். இவ்வாறு வரலாற்றை திரித்து கூறுவது அம்மாவின் பெயருக்கும்,புழுக்கும் கலங்கம் விளைவிக்கும்.அதனால் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கவில்லை என்றால் மேற்கொண்டு கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.