சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க ஆளும் திமுக அரசுக்கு அஇஅதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின், நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. தமிழக காவல்துறைத் தலைவர், “ஆப்பரேஷன் மின்னல்” என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில், 3,905 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடுகிறார். இவர்களில் உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கிய 2,390 நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்கும் வேலையை காவல்துறை செய்கிறதா? என்பதற்கு சரியான விளக்கமில்லை. இவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டதன் மர்மம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்றும், இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்த திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.