சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. 3வது கட்ட கலந்தாய்வு வரும் 13ம் தேதி துவங்க உள்ளது. இதில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பவியல் பிரிவில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில், காலியிடங்கள் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.