பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93. திரு சுப்பையா பிள்ளை, திரு நவநீத கிருஷ்ண பிள்ளை, மற்றும் கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரிடம் வில்லுப்பாட்டு கலையை முறையாகப் பயின்ற இவர், வில்லுப்பாட்டு இசைப்பதையே தமது முதன்மை தொழிலாக கொண்டிருந்தார். ராமாயணம் மகாபாரதம் மட்டுமின்றி பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் தமது வில்லுப்பாட்டின் மூலம் மக்களுக்கு வழங்கி உள்ளார். 15 நூல்களை இவர் எழுதியுள்ளார். பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள சுப்பு ஆறுமுகத்துக்கு 2021ஆம் ஆண்டு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது. சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.