குஜராத் மாநிலத்தில், இந்தியாவில் முதல் அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், வந்தே பாரத் தனது சேவையை தொடங்கிய சில நாட்களில் மும்பையிலிருந்து காந்திநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் புகுந்த எருமை மாடுகள் மீது மோதியது. இதனால் சேதமடைந்த ரயிலின் முன்பகுதி உடனே சரி செய்யப்பட்டு மீண்டும் வந்தே பாரத் தனது பயணத்தை தொடங்கியது. இதைத்தொடர்ந்து, காந்திநகரில் இருந்து மும்பை வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் மீது பசு மாடு மோதியதில் முன்பு சேதமடைந்து சரிசெய்யப்பட்ட அதே முன்பகுதி மீண்டும் சேதமடைந்தது. இதன் காரணமாக ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டு பின்னர் சீர்செய்யப்பட்டது. இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னதாக, இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியாது என்றும், இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டுதான் ரயில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ரயில் முன்பகுதியை முற்றிலும் மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார். இத்துடன், அடுத்த கட்டமாக மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.