நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், அமைதி முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் இருந்தும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவுக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆலன் ஏஸ்பெக்ட், ஜான் எஃப்.கிளாசர், ஆண்டன் ஜெய்லிங்கர் ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வேதியியலுக்கான நோபல் பரிசு கரோலின் ஆர் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் கே பாரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இலக்கியத்திற்கான நோபல் பரிசு ‘எல் அகுபேஷன்’ (L’occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் ரஷிய நாட்டைச் சேர்ந்த மெமொரியல் என்ற அமைப்பு உக்ரைன் நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவிக்க பாடுபடும் சிவில் லிபர்ட்டீஸ் மையம் ஆகியவைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.