காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை (பாரத் ஜோடோ யாத்) ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய ராகுலின் இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், தமிழகத்தில் மட்டும் மொத்தம் நான்கு நாட்கள் இந்த பாதயாத்திரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா வழியாக தற்போது கர்நாடக மாநிலத்தில் அவர் பயணித்து வருகிறார். அவருக்கு, வழி எங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்தநிலையில், ராகுலின் பாதயாத்திரையில் சோனியா காந்தி இணைந்துள்ளார். உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் இருந்து விலகி இருந்த சோனியா இன்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுலின் பாதயாத்திரையில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, கர்நாடக மாநிலத்தில் தனது 5வது நாள் பயணத்தை இன்று மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த பயணத்தில், ராகுல் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 148 நாட்கள் மொத்தம் 3,600 கி.மீ. தொலைவு கடந்து காஷ்மீரை அவர் அடையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.