சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் வள்ளளார் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று “வள்ளலார்-200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர், ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்கள் நடைபெறும் விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பெரியார் பிறந்தநாள் விழாவை சமூகநீதி நாளாகவும் அம்பேத்கர் பிறந்தாள் விழாவை சமத்துவ நாளாகவும் அறிவித்தது திராவிட மாடல் ஆட்சி. அப்படி இருக்க இன்று வள்ளலார் முப்பெரும் விழா என்ற இந்த நிகழ்ச்சி நடைபெறுவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஏன் அதிரிச்சியாக கூட இருக்கலாம். திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என வெட்டி, ஒட்டி திரித்து பரப்புவார்கள். மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் இருக்கின்றனர். அமைச்சர் சேகர்பாபு கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு செல்லவதுதான் அதிகம். ஒருநாளைக்கு மூன்று ஊர்களில் இருக்கும் வெவ்வேறு கோவில்களுக்கு சென்று பணியை செய்பவர் சேகர்பாபு. ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக, ஆனால் ஆன்மிகத்தை தங்களது சொந்த நலனுக்கும், உயர்வு தாழ்வு கற்பிக்கவும் பயன்படுத்துவோருக்கு எதிரானதுதான் திமுக. பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற வள்ளுவரின் மண் தமிழ் மண். நட்ட கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் எனும் சித்தர்கள் உலவியது, இறைவன் ஒருவனே இறைவன் ஜோதி மயமானவன் என்ற வள்ளலார் வாழ்ந்த மண். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை அண்ணா முன்வைத்தார். அறப்பணிகளை கண்காணிப்பதற்காகவே, கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்பவர் சேகர்பாபு. ஆன்மிக செயற்பாட்டாளர் சேகர்பாபு. வள்ளலார் நகரை உருவாக்கியவர் கருணாநிதி. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும். 100 கோடி மதிப்பில் அதற்கான பணி நடக்கிறது , விரைவில் கட்டுமான பணி தொடங்கும். வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதற்கு 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மணிமேகலையின் அமுத சுரபி, வள்ளலாரின் அணையா நெருப்பு வழியில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பசிப்பிணி போக்கி , அறிவுப் பசிக்கு தீனி வழங்கும் அரசு இது.