குஜராத் மாநிலத்தில் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா முழுவதையும் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வீரர், வீராங்கனைகள் 36 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். ஏற்கனவே உள்ள நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து உள்பட விளையாட்டு போட்டிகளுடன் இந்தாண்டு கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவையும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு மகளிர் அணி தட்டிச் சென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக 2ஆவது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு, 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை தடகளத்தில் கைப்பற்றியுள்ளது. மகளிர் பிரிவில் மட்டும் தமிழக வீராங்கனைகள் 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழ்நாடு வீரர் வீராங்கனைகள் ஒட்டுமொத்தமாக 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் அர்ச்சனா சுசீந்திரன் 200 மீட்டர் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடையோட்டத்திலும், என்.அஜித் பளு தூக்குதலிலும் தேசிய சாதனை படைத்துள்ளனர்.