தாய்லாந்து நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் சிலரை அழைத்துச் சென்று அவர்களை மியான்மரில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு நாளொன்றுக்கு சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக வேலைவாங்குவதாகவும், சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்து கொண்டு பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உதவி கேட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவர்களுக்கு உதவ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட முயற்சியை அடுத்து இன்று முதற்கட்டமாக மீட்கப்பட்ட 13 தமிழர்கள் நள்ளிரவு 2 மணிக்கு சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு சார்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.