அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி சுற்று மூலம் முன்னேறியவரான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 150-வது இடம் வகிக்கும் எம்மா ரடுகானுவும் (இங்கிலாந்து), 73-ம் நிலை வீராங்கனை லேலா பெர்னாண்டசும் (கனடா) மோதினர்.
வழக்கமாக அமெரிக்க ஓபன் இறுதி சுற்றில் நட்சத்திர வீராங்கனைகளே வரிந்து கட்டுவார்கள். ஆனால் இந்த முறை முன்னணி தலைகள் உருண்டதால் காட்சிகள் எல்லாமே புதுமையாக மாறியது. போட்டித்தரநிலையில் இடம் பெறாத (டாப்-32 வீராங்கனைகள் மட்டுமே தரநிலை வழங்கப்படும்), அதுவும் ‘டீன் ஏஜ்’ மங்கைகள் சந்தித்தது வரலாற்றில் அரிதான ஒன்றாகும். 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் ரடுகானுவும், பெர்னாண்டசும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆனால் அதிரடியான ஷாட்டுகள் மற்றும் பந்தை லாவகமாக திருப்புவதில் சாதுர்யமாக செயல்பட்ட ரடுகானு தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டு லேசாக ரத்தம் வழிந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு விளையாடிய போதிலும் அவரது உத்வேகம் குறையவில்லை. முதல் செட்டை 6-4. என்ற கணக்கில் கைப்பற்றிய ரடுகானு 2-வது செட்டில் 1-2 என்று பின்தங்கிய பிறகு மீண்டெழுந்தார். இறுதியில் அருமையான ஒரு ஏஸ் சர்வீஸ் போட்டு வெற்றிக்கனியை பறித்தார்.
1 மணி 51 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் எம்மா ரடுகானு 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லேலா பெர்னாண்டசை தோற்கடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சிமுகர்ந்தார். வாகை சூடிய ரடுகானு ரூ.18½ கோடியையும், 2-வது இடம் பிடித்த லேலா பெர்னாண்டஸ் ரூ.9¼ கோடியையும் பரிசுத்தொகையாக அள்ளினர். இந்த வெற்றியின் மூலம் 18 வயதான எம்மா ரடுகானு பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். ரடுகானு அமெரிக்க ஓபனில் நேரடியாக பிரதான சுற்றில் கால்பதிக்கவில்லை. தகுதி சுற்றில் 3 ஆட்டங்களிலும் நேர் செட்டுகளில் வெற்றி கண்டு அதன் மூலம் பிரதான சுற்றை வந்தடைந்தார். பிரதான சுற்றில் 7 ஆட்டங்களிலும் வெற்றியை குவித்ததோடு ஒரு செட்டை கூட இழக்கவில்லை.
‘கிராண்ட்ஸ்லாம் ’ ஒற்றையர் வரலாற்றில் ஒரு தகுதி நிலை வீராங்கனை மகுடம் சூடியது இதுவே முதல் நிகழ்வாகும். அத்துடன் 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் எந்த செட்டையும் இழக்காமல் பட்டத்தை கைப்பற்றியது இவர் தான். 2004-ம் ஆண்டு ரஷியாவின் மரிய ஷரபோவா தனது 17 வயதில் விம்பிள்டன் டென்னிசில் பட்டத்தை ருசித்தார். அதன் பிறகு இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராகவும் ரடுகானு திகழ்கிறார்