நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா, நிகழ்ச்சி ஒன்றில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், அங்கு பெரிய கடைகள், தனியார் பேருந்துகள் மற்றும் டெம்போக்கள் இயங்கவில்லை. ஒருசில புதுச்சேரி மற்றும் தமிழக அரசுப் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.