பழங்குடிகள் பற்றிய ஆய்வுக்காக சென்ற ஹேமா தற்போது அவர்களுடைய முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் சமூக செயல்பாட்டாளராக உருவெடுத்துள்ளார்.திருவள்ளூர் உதப்பை கிராமத்தைச் சேர்ந்த இவர் மானுடவியல் தறையில் முனைவர்பட்டம் பெற்றுள்ளார்.இவர் தன்னுடைய ஆய்வுக்காக பழங்குடி மலை கிராமங்களை நோக்கி அலைந்தவர்.தற்போது முழுநேரமும் அவர்களை பற்றியே சிந்திக்க தொடங்கியுள்ளார்.குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை மீட்டு அவர்களை படிக்க வைத்து அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.அதுமட்டுமின்றி கொரோனா லாக் டௌன் காலத்தில் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது,சில மலைவாழ் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்குத் தேவையான அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கியும் உதவி செய்துள்ளார்.அவரிடம் இது குறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
“பழங்குடிகளின் நலனில் அக்கறை செலுத்த காரணம் என்ன ?”
ஆரம்பத்தில் மற்ற மாணவர்களை போல் நானும் சாதாரணமாக இளநிலைக் கல்வியை எடுத்து படித்தேன்.ஆனால் முதுகலை கல்வியில் நான் படிக்கிற படிப்பு மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதை யோசித்தேன்.அதன்படி முதுகலை கல்வியை மானுடவியல் துறையை எடுத்து படித்தேன்.அதன்பிறகு ஆய்வு படிப்பை தொடர்ந்தபோது பழங்குடிகள் மற்றும் சாதியைப் பற்றி ஆய்வை மேற்கொள்ளலாம் என்று தீர்மானித்தேன்.அப்போது இது தொடர்பாக பெரிய அளவில் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் பழங்குடிகளை தேடி அலைந்தேன்.அப்படி அவர்களை நோக்கிய பயணத்தில் அவர்களுடைய கல்வி,சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு அவர்கள் எதுவுமே இல்லாமல் இருப்பதை கண்டு மிகுந்த வேதனையுற்றேன்.அப்போதே தீர்மானித்து விட்டேன்.இவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்மென்று,அதன்படியே தற்போது என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து வருகிறேன்.
“தமிழகத்தில் உள்ள பழங்குடிகளின் வாழ்வியல் எப்படி உள்ளது?”
தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.இவர்களுடைய கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளே அவர்களுக்கு எட்டாக் கனியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பழங்குடிகளில் மலையாளி மக்கள் தான் அதிகம்.காணப்படுகிறார்கள்.இதுவரை மூதாதையர் என்ன மருத்துவ முறைகளை பின்பற்றினார்களோ அதே முறையைத்தான் அவர்கள் இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.அதே போன்று போக்குவரத்து,சாலை வசதி போன்ற வசதிகளுக்கு ஏற்ப மலை கிராமங்கள் மாறியுள்ளன.ஆனால் சொல்லும்படியாக அவர்களுடைய வாழ்கைத் தரம் உயரவில்லை என்பது தான் உண்மை.
“பழங்குடி பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது ? ”
“பெரும்பான்மையான பழங்குடிகள் தாய்வழி சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள்.எந்த ஆணின் அனுமதிக்காகவும் இவர்கள் காத்திருக்கமாட்டார்கள். முடிவை இவர்களே சுதந்திரமாக எடுக்க கூடியவர்கள்.அதனால் இங்கு பாலினச் சமத்துவம் மேலோங்கி இங்கு இருக்கும்.குறிப்பாக பெண்களின் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இங்குள்ள ஆண்கள் இருக்கிறார்கள்.ஒரு ஆண் வேட்டைக்குச் சென்றால் கூடவே அந்த பெண்ணும் வேட்டைக்கு செல்லுவார்.ஒரு ஆண் எவ்வளவு பொருளாதாரம் ஈட்டுகிறானோ அதே அளவு பெண்களும் பொருள் ஈட்டி வருவார்கள்.அதனால் பெண்ணின் உழைப்புக்கும்,பொருளாதாரத்திற்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் போது தாய்வழி சமூக முறைப்படியே அனைத்து சடங்குகளும் நடைபெறுகிறது.நம் சமூகத்தில் இருப்பது போன்று வரதட்சணைக் கொடுத்து பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்,இங்கு மாப்பிள்ளையே மணப் பெண்ணுக்கு நகைகளை போட வேண்டும்.இவ்வாறு மாப்பிள்ளை வழியில் சீர் கொடுப்பதோடு,திருமணம் முடிந்து பெண் வீட்டிற்கே அந்த மாப்பிள்ளை செல்ல வேண்டும் என்பது முறை.
நமது கலாச்சாரத்தில் சாதியப் பாகுபாடு மேலோங்கியதால் ஆணாதிக்கம் தலைதூக்கியது.ஆனால் இங்கு சாதிய பாகுபாடுகள்,பாலினப் பாடுகள் என எதுவுமே இல்லை. அதே போன்று ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் என்றால்,தீட்டு என்று கூறி நாம் அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கிறோம்.ஆனால் அவர்கள் அதை புனிதமாக கருதி,மாதவிடாய் உள்ள ஒரு பெண்ணை அழைத்து விதை விதைக்கச்சொல்கிறார்கள்.சொத்துக்கள் பிரிப்பதில்,நம் வழக்கப்படி ஆண் மகனை முன்னிறுத்தி சொத்துக்களை பிரிக்கின்றனர்.ஆனால் பழங்குடிகளை பொருத்தவரை,தாய்வழிச் சமூக முறைப்படி பெண்ணை முன்னிறுத்தியே சொத்துக்களைபிரிக்கின்றனர்.அதனால் அங்குள்ள பெண்கள் முழுசுதந்திரத்துடன் செயல்படுகிறார்கள். ”
“பழங்குடிகளின் வாழ்வாதாரம் முன்னேறாமல் இருக்க காரணம் என்ன ? ”
“அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களை அங்கு கொண்டு சேர்க்கமுடியவில்லை.நலன் சார்ந்த விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தினாலும்,அவர்களுடைய உரிமைகள் சார்ந்த விஷயங்களில்,அரசாங்கத்தால் சரிவர செய்யமுடியவில்லை.குறிப்பாக எந்த ஆசிரியர்களும் மலைக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி உரிமையை வழங்கத் தயாராக இல்லை. இதனால் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி முழுவதுமாக மறுக்கப்படுகிறது.
பள்ளிக்குச் சென்ற ஒன்றிரண்டு மாணவர்களும் கொரோனா காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கொத்தடிமைகளாக வேலைக்குச் சென்று விட்டார்கள். அதுமட்டுமின்றி அவர்களுடைய வாழ்வாதாரமே தினக் கூலியை நம்பி இருப்பதால்,வேலைத் தேடி குழந்தை குட்டிகளோடு அவர்கள் இடம் பெயர்ந்து விடுகிறார்கள்.இதன்காரணமாகவும் அந்த குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது.மேலும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வனஉரிமைச் சட்டம் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எதிராக உள்ளது.இதன் காரணமாக பொருளாதாரம் ஈட்ட முடியாத நிலையில்,பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி விடுகிறார்கள்.அவர்களில் ஒரு தலைமுறையாவது கல்வி அறிவு பெற்றுவிட்டால் போதும் அடுத்து அடுத்து வருகிற தலைமுறைக் கல்வி அறிவு பெறும்.அதற்கு அங்கு வழியில்லாத காரணத்தால் தான் இன்னும் அவர்களுடைய வாழ்வாதாரம் மேம்படாத நிலையில் உள்ளது
“பழங்குடிகளின்வாழ்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் ? ”
“அரசாங்கம் அவர்களுக்கு நலத்திட்டங்களை ஒதுக்கிறது.ஆனால் அவர்களுக்கு அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அதிகாரிகள் மட்டத்திலேயே அந்த நலத்திட்டங்கள் முடங்கி விடுகிறது.அதனால் அரசின் நலத்திட்டங்களையும், உரிமைகளையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும். அதை தருவதற்கு அரசாங்கம் தான் முன்னெடுக்க வேண்டும்.குறிப்பாக முறையான கணக்கெடுப்பு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பழங்குடிகள் கிராமங்களில் உண்டு உறைவிடப்பள்ளியை ஏற்படுத்த வேண்டும்.இருபத்தி நான்கு மணி நேரமும் ஆசிரியர்கள் அங்கேயே தங்கி அந்த மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவித்தால் போதும் அவர்களுடைய பொருளாதாரம், சுகாதாரம் ஆகியவை மேம்பட வாய்ப்புள்ளது.”என்றார்