கா்நாடக மாநிலம் உடுப்பி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து, அந்த மாநில அரசு கல்வி நிறுவனங்களில் வகுப்பறைக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஹிஜாப் அணிவது மத ரீதியாக அடிப்படை உரிமை இல்லை என்றும் அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் கூறி, மாா்ச் 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 24 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு, வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.