இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கேன்டர்பரி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, களம் இறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 44.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வென்றுள்ளது. நாளைய 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றும் முணைப்பில் இந்திய மகளிர் அணி உள்ளது. இந்த போட்டியில், ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை கடந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.