எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புடனும் கண்களில் ஆயிரமாயிரம் கனவுகளுடனும் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார் விஸ்மயா. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அந்த 24 வயது இளம்பெண், தற்போது உயிருடன் இல்லை. வரதட்சணைக்குப் பலியாகும் பெண்களின் பட்டியலில் விஸ்மயாவின் பெயரும் இணைந்துவிட்டது.
ஆயுர்வேத மருத்துவராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த விஸ்மயா, அந்த லட்சியம் கைகூடும் முன்பே குடும்ப வன்முறைக்குப் பலியானார். விஸ்மயாவுக்கும் கேரள போக்குவரத்துத் துறையில் வாகன உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய கிரண் குமாருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம்தான் என்கிறபோதும் இருவரும் ஒருவரையொருவர் விரும்பியே மணந்துகொண்டனர்.
“மேட்ரிமோனியல் மூலமாகத்தான் கிரணைத் தேர்ந்தெடுத்தார் என் தங்கை. அதன் பிறகு இருவரும் போனில் பேசி முடிவெடுத்தனர். திருமண நாளுக்குள் இருவரும் காதலர்கள்போலத்தான் நடந்துகொண்டனர்” என்று விஸ்மயாவின் அண்ணன் விஜித், ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையில் கண்டிப்புடன் இருந்திருக்கின்றனர். விஸ்மயாவின் குடும்பமும் சொத்தில் தங்கள் மகளுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிடுவதாகச் சொன்னார்கள். ஒன்றரை ஏக்கர் நிலம், 100 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாகத் தரச் சம்மத்தித்தனர். நிலத்துக்குப் பதிலாகப் பணம் வேண்டும் என்று கிரண் கேட்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கால் ரியல் எஸ்டேட் மந்த நிலையில் இருந்ததால் விஸ்மயாவின் குடும்பத்தினரால் இடத்தை விற்க முடியவில்லை.
ஆனால், கிரண் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. புகுந்த வீட்டினருக்குப் பணம் ஒன்றே குறியாக இருந்தது. பணம் கேட்டு விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தினர். ஆரம்பத்தில் அதைப் பற்றித் தன் பிறந்த வீட்டினரிடம் எதுவும் சொல்லவில்லை விஸ்மயா. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு, விஸ்மயாவைப் பணத்துடன் வரும்படிச் சொல்லி அவரது பிறந்த வீட்டுக்கே அனுப்பிவிட்டனர். அப்போதுதான் அனைத்தையும் தன் குடும்பத்தினரிடம் சொன்னார். மகளின் நிலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டது அந்தக் குடும்பம். கிரண் வீட்டினரை வரவழைத்துப் பேசினர். அப்போது அனைவர் முன்னிலையிலும் விஸ்மயாவை அவருடைய கணவர் அடித்தார். குழந்தைகளை முற்போக்குடன் வளர்த்த விஸ்மயாவின் பெற்றோருக்குத் தங்கள் கண்ணெதிரிலேயே மகள் பட்ட துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், மகளைத் தங்களுடனேயே வைத்துக்கொண்டனர்.
காலம் வேறொரு கணக்கை வைத்திருந்ததுபோல. கல்லூரிக்குச் சென்றிருந்த விஸ்மயாவைத் தன் பிறந்த நாளைக் காரணமாகச் சொல்லித் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் கிரண். அதற்குப் பிறகு அம்மாவிடம் மட்டுமே விஸ்மயாவால் பேச முடிந்தது. தன் தலைமுடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் அடித்ததாக வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார் விஸ்மயா. மகள் அனுப்பிய படங்களைப் பார்த்த குடும்பம் இடிந்துபோனது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மகள் தற்கொலை செய்துகொண்ட செய்தி அந்தக் குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது. கொல்லத்தில் உள்ள புகுந்த வீடு, விஸ்மயாவின் வாழ்க்கையைச் சீரழித்து அவரது கனவுகளைக் குலைத்துப்போட்டுவிட்டது.
கிரணைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. என்ன நடந்து என்ன? பறிபோன மகளின் உயிர் மீண்டும் கிடைக்குமா என்று கதறுகிறது விஸ்மயாவின் குடும்பம். வரதட்சணை பெறுவது காட்டுமிராண்டித்தனமான செயல் என்று விமர்சித்திருப்பதுடன் வரதட்சணை கொடுத்து உங்கள் மகள்களைப் பொருட்கள்போல விற்காதீர்கள் என்று பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். என்று தீரும் வரதட்சணைக் கொடுமை?