பெண்ணை உடலாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் பார்வையை மாற்றி உயிராக நினைக்க வைப்பதற்குச் சமூக விழிப்புணர்வே வழியாக அமைய முடியும்.
சமூகப்பணிக் கல்வி என்ற தென்னிந்திய மாணவர்களின் கனவை மீட்டுக்கொண்டுவந்த ஒற்றைப் பெண்மணி மேரி கிளப் வாலா ஜாதவ். உதகமண்டலத்தில் வசதியான பார்சி குடும்பத்தில் 1908ஆம் ஆண்டு பிறந்து, கல்வியோடு சேவையின் உன்னதத்தைப் புரிந்துகொண்டு திரு மணத்திற்குப் பிறகு சென்னைக்கான வரவாக வந்தவர் அவர்.
சிறிய வயதிலேயே கணவனை இழந்த சோகத்தை எதிர்கொண்டார் அவர். பின்னர் பல ஆண்டுகள் கழித்துத் தன்னைப் போலச் சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட மேஜர் சந்திரகாந்த் கே. ஜாதவ் என்ற இந்திய ராணுவ அதிகாரியை மணந்துகொண்டார். எதற்கும் மனம் தளராத மேரி செய்த சேவையின் சாட்சியாக நிமிர்ந்து நிற்கின்றன சென்னை எழும்பூரில் உள்ள சென்னை சமூகப்பணிக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்கள்.
இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்தபின் பாதிக்கப்பட்ட இந்தியப் படை வீரர்களைப் பராமரிக்க ‘கில்ட் ஆஃப் சர்வீஸ்’ என்ற சேவைக் குழுமத்தின் துணையுடன் வெளியுலக அனுபவம் இல்லாத பல பெண்களைத் தன்பால் ஈர்த்து ராணுவத் துறை மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் தொண்டாற்றச் செய்தார்.
சென்னையில் சமூகப்பணிக் கல்வி நிறுவனம் நிறுவ நிதி நெருக்கடியைக் காரணம் காட்டிய அரசு, கல்வி நிறுவனத்திற்கு ஆசிரியப் பெருமக்கள் வந்து பாடம் கற்றுக் கொடுத்தால் நிதி நிலைமையைச் சமாளிக்கலாம் என்று பரிந்துரைத்தது. இந்தச் சூழலில் கல்வி நிறுவனத்தின் சேர்க்கை குறித்த அறிவிப்பை அதிரடியாகப் பத்திரிகையில் வெளியிட்டார் மேரி. குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டுமான விடுதி வசதி உள்ளது என்ற அறிவிப்புடன் அப்போது மாணவர் சேர்க்கை தொடங்கியது என்பதே பெரிய சாதனை!
அன்றைய தமிழக முதல்வர் சி. ராஜகோபாலாச்சாரியை அழைத்துத் தொடக்க விழா நடத்தினார் மேரி கிளப் வாலா. ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறையை அந்தக் காலத்தில் மேரி கிளப் வாலா ஜாதவ் நடைமுறைப்படுத்தினார். குடும்பங்களுக்கான பிரத்யேக நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார். அதில் முக்கியமானது குடும்பக் கட்டுப்பாட்டு மருத்துவமனைக்குச் செயல் வடிவம் கொடுத்தது.
‘பால் பவன்’ என்ற சிறுவர் சிறுமியருக்கான இல்லம், ‘பால் விஹார்’ என்ற சிறப்புக் குழந்தைகளுக்கான இல்லம், குழந்தைகள் காப்பகம் ஆகியவை அவரின் அக்கறையால் தோற்றம் பெற்றன. முதியோர் இல்லம், பெண் சிறைக் கைதிகளுக்கான ஆலோசனை சேவை, படிப்பில் பின்தங்கியிருக்கும் வசதி வாய்ப்பற்ற பெண் குழந்தைகளுக்கான சிற்றுண்டியுடன் கூடிய மாலை நேர வகுப்புகள், மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பதுடன் அவர்களுக் கான மறுவாழ்வு மையம் என்று பயன்தரக்கூடிய திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
காது கேளாத குழந்தைக ளுக்கான சிறப்புப் பள்ளி, அச்சகம், கிராம அபிவிருத்தித் திட்டங்கள், குழந்தைகள் நிதியுதவிப் பிரிவு, உழைக்கும் பெண்களுக்கான விடுதிகள், சுகாதார நிலையம் போன்றவற்றைத் தொடங்கவும் அவர் காரணமாக இருந்தார். 150-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் தன்னை இணைத்துக்கொண்ட இந்தப் பெண் ஆளுமை மக்களுக்கான நலத் திட்டங்களின் முன்னோடியாகவும் விளங்கினார். எத்தனையோ அரசியல் தலைவர்களுடன் நட்பு ரீதியில் பழகினாலும் அரசியலில் ஈடுபட அவர் விரும்பவில்லை.
அமெரிக்க நாடு பட்டுக் கம்பளம் விரித்து அழைத்துக்கொண்ட முதல் இந்தியப் பெண் தன்னார்வ சமூக சேவகர் மேரி கிளப் வாலா ஜாதவ். அமெரிக்காவின் அழைப்பின் பெயரில் சென்ற அம்மையார் சமூக சேவை செயல்பாடுகள் பற்றிய சிறப்புரையாற்றித் தாயகம் திரும்பினார். சென்னையின் ‘முதல் பெண் ஷெரீஃப்’ என்ற பெருமைக்குரியவர் அவர். சர்வதேச அளவில் சிறந்த சமூக சேவகி விருதும் பெற்றவர் இவர். பத்ம, பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற உயரிய விருதுகளை வென்றவர் அவர்.
தன் ஒரே மகன் ஃபில்லின் அகால மரணம் அவரைப் புரட்டிப்போட்டது. அவரும் புற்றுநோயின் காரணமாக மும்பையில் 06.02.1975 அன்று காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டார். அவர் நிறுவிய கல்லூரி அவருடைய நினைவாக ஆண்டுதோறும் ’எம்.சி.ஜே. விருது’ என்ற பெயரில் விருது வழங்கி சமூகப் பணிக்காக அர்ப்பணித்துக்கொள்பவர்களைக் கௌரவித்து வருகிறது.