இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் முதுமை காரணமாக உடல்நலக்கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். கோடை காலத்தை கழிப்பதற்காக ஸ்காட்லாந்தின் பால்மோரல் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். முதுமை தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டுவந்த அவரை டாக்டர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது மகன்களான இளவரசர்கள் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட், மகளும் இளவரசியுமான ஆன் ஆகியோர் பால்மோரல் விரைந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் அமைதியாக பிரிந்தது. அந்த தகவலை லண்டன் பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது. தகவல் அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனை முன் கூடினர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்பட்டது.
இங்கிலாந்து ராணி மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.