சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செல்கிறார். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு பல்வேறு காரணங்களுக்காக அவர் அதிமுக அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்த நிலையில், 72 நாட்களுக்குப் பின்னர் அவர் தலைமை அலுவலகம் செல்கிறார். முன்னதாக, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதுடன், ஓபிஎஸ் உள்பட பலரின் பதவிகள் ரத்து செய்ததுடன் புதிதாக பலர் பதிவியேற்றுக்கொண்டனர். இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஓபிஎஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.